அமேரிக்க விரோத செயல்
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களை எல்லாம் அதிரடியாக வெளியேற்றுவது என்ற டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். வெளியேற்றப் படுபவர்கள் அனைவருமே சட்டவிரோதமாக குடியேறியவர்களா அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பவர்களா என்பதெல்லாம் வேறு விடயம். ஆனால் அந்த நடவடிக்கைகளை எல்லாம் சவுதி துபாய் போன்ற அரபு நாடுகள் செயல்படுத்துவதுபோலச் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
அரபு நாடுகளில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களை எப்படி வெளியேற்றுகிறார்கள் என்று முதலில் பார்ப்போம்.
தொழிலாளர் சட்டங்களை எவ்வளவுதான் கடுமையாக நடைமுறைப் படுத்தினாலும் பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் தொழிலாளர்களின் விசா காலாவதி ஆகிவிடுகிறது. இவ்வாறாக விசா காலாவதி ஆன பலரும் எந்தவிதமான உத்தரவாதங்களும் இல்லாமல் கிடைத்த வேலைகளைச் செய்துவருவர். எதிர்பாராத விதமாக இவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பெரும் சிக்கலாகி விடும். இவ்வாறானவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படும்.
எப்படிப் பார்த்தாலும் ஒவ்வொரு ஐந்தாண்டுகள் இடைவெளியிலும் இவ்வாறான இல்லீகல் தொழிலாளர்களின் எண்ணிக்கை சில பல ஆயிரங்களைத் தொட்டுவிடும். எனவே பெரும்பாலும் ஒவ்வொரு ஐந்தாண்டுகள் இடைவெளியிலும் பொதுமன்னிப்புக் காலங்களை சுமாறாக ஆறுமாதங்கள் வரை நடைமுறைப்படுத்துவார்கள்.
அவ்வாறான காலங்களில் ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் செயல்படும். குற்றச் செயல்களில் தொடர்பில்லாத அனைவரும் தங்களுடைய பாஸ்போர்ட் விவரங்களை அந்தச் சிறப்பு முகாம்களில் சமர்ப்பித்து கைரேகை அல்லது கருவிழி அடையாளங்களைப் பதிவு செய்தால் சாதாரணமான பயணிகளைப்போல நாட்டைவிட்டு நிரந்தரமாக வெளியேறுவதற்கான ஆவணங்களைத் தயார் செய்து தருவார்கள்.
இதற்குப் பிறகும் நாட்டைவிட்டு வெளியேற ஒன்றிரெண்டு மாத காலவகாசமும் கொடுப்பார்கள். இவ்வாறான காலகட்டங்களைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட எல்லோருமே வெளியேறி விடுவார்கள். இதுபோன்ற பொதுமன்னிப்பு இல்லாத எல்லாக் காலங்களிலும் விசா சம்பந்தமான சோதனைகள் ஆங்காங்கே தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும். அப்போதெல்லாம் உரிய ஆவணங்கள் இல்லாதவர்களாக இருந்தால் அவர்களைக் கைதுசெய்து நாடுகடத்துவதற்காக இயங்கும் சிறைகளில் அடைப்பார்கள்.
இதுபோன்றவர்கள் குற்றச் செயல்களில் தேடப்படாதவர்களாக இருந்தால் சுமார் ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கத்தின் செலவிலேயே அவரவர் நாட்டிற்கு சாதாரணமாக இயக்கப்படும் பயணிகள் விமானத்திலேயே அனுப்பி வைக்கப்படுவார்கள். இப்போதும்கூட அரபுநாடுகளில் இருந்து மும்பை மற்றும் டெல்லி செல்லும் பெரும்பாலான பயணியர் விமானங்களில் எல்லாம் நாடுகடத்தப்படுபவர்கள் ஒருசிலராவது இருப்பார்கள். இவ்வாறானவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும்போது அவர்களுடைய உடமைகளை அவர்களின் நண்பர்கள் யாரேனும் சிறை அதிகாரிகளிடம் கொண்டுபோய் கொடுத்தால் அவற்றைக் கொண்டுபோவதற்கும் அனுமதிப்பார்கள்.
அதிபுத்திசாலிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் அமெரிக்க நிர்வாகத்திற்கு இந்த அளவு அடிப்படை அறிவு கூட இருக்காதா?
சில பல ஆண்டுகளாக தங்கள் நாட்டில் இருந்தவர்களை அவசர கோலத்தில் இராணுவ விமானத்தில் ஏற்றி இறக்க வேண்டிய அவசியம் என்னவோ? அதிரடி என்ற பெயரில் மகா கேடுகெட்ட ஈனத்தனமான செயலைச் செய்த அமெரிக்காவின் செயலை இந்திய வெளியுறவுத்துறையின் அமைச்சரே நியாயப்படுத்துவதும் அதற்குச் சங்கிகள் முட்டுக் கொடுப்பதும் உச்சக்கட்ட கேவலம்.
அண்மையில் அமெரிக்காவிருந்து 103 இந்தியர்கள் அமெரிக்காவின் இராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதற்குப் பின்னனியில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று பார்ப்போம்…
முறையான ஆவணங்கள் இல்லாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டு நாடுகடத்துவதற்காக இயங்கும் சிறைகளிலோ அல்லது முகாம்களிலோ அடைத்திருப்பார்கள். அவர்களில் ஒரிஜினல் பாஸ்போர்ட் இல்லாத அனைவருக்கும் இந்திய தூதரகத்தின்மூலம் எமர்ஜென்சி பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருக்கும். பாஸ்போர்ட் விவரங்களின் அடிப்படையில் இவர்கள் அனைவரின் கைரேகை அல்லது கண் கருவிழிப்படலம் பதிவேற்றப்பட்டு அமெரிக்காவின் கருப்பு பட்டியலில் சேர்த்திருப்பார்கள். பயணியர் விமானத்தின் மூலமாக அல்லாமல் சிறப்பு இராணுவ விமானம் மூலம் அனுப்பப்படுவதால் இந்த 103 நபர்களின் முழு விவரங்களும் அமெரிக்காவில் இயங்கும் இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும். அதனடிப்படையில் இந்தியாவின் எந்த விமானநிலையத்தில் அந்த விமானத்தை இறக்குவது என்று முடிவு செய்வதற்காக டெல்லியில் இயங்கும் வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு கோரிக்கை வந்திருக்கும். டெல்லி அதிகாரமையம் முடிவெடுத்து இந்தியாவின் பஞ்சாப் அமிர்தசர் விமான நிலையத்தை கைகாட்டியிருக்கும். அதன்பிறகுதான் அந்த விமானம் அமெரிக்காவிலிருந்தே புறப்பட்டிருக்கும்.
இந்த தகவல்கள் எல்லாமே இந்திய வெளியுறவுத் துறைக்கும், இந்திய தூதரகத்திற்கும் தெரிந்துதான் நடந்தாகவேண்டும். இவ்வளவு கேவலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தபிறகும் இந்திய வெளியுறவுத் துறையோ, இந்தியத் தூதரகமோ இதுபற்றி மூச்சுகூட விடவில்லை. அமெரிக்க அதிகாரி ஒருவர்தான் 204 இந்தியர்களை இராணுவ விமானத்தில் நாடுகடத்தியிருப்பதாக டிவிட்டரில் பதிவு செய்தார். அதன்பிறகுதான் இந்த விசயமே வெளியில் தெரிந்தது. அவர் சொன்ன 204 என்ற நம்பர் இந்தியாவில் எப்படி 103 ஆனது என்பது படைத்தவனுக்கே வெளிச்சம்.
வந்து சேர்ந்த இந்த 103 நபர்களுக்கும் கை கால்களில் விலங்குச் சங்கிலி இட்டது சரியா? என்ற விவாதமே தவறானது. சாதாரணமான பயணிகள் விமானத்தில் இவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் விமானத்தில் நுழைவதற்கு முன்பாகவே சங்கிலிகளை அவிழ்த்து விடுவார்கள். இவர்கள் வந்ததோ அமெரிக்காவின் இராணுவ விமானம். அந்த விமானத்தில் அதிகபட்சம் நான்கு பைலட்டுகளும் பத்தோ இருபதோ இராணுவ வீரர்களும் இருந்திருப்பார்கள். நாடு கடத்தப்படும் கோபத்திலும் விரக்தியிலும் இருப்பதோ நூற்றுக்கும் மேற்பட்ட இளம் கைதிகள். நமக்கு வேண்டுமானால் இவர்கள் இந்தியர்கள் என்ற பாசம் இருக்கலாம். அமெரிக்காவைப் பொருத்தவரை இவர்கள் அனைவரும் கைதிகளே. இவர்கள் அனைவருக்கும் விலங்கிடாமல் இருந்தால் பறக்கும் விமானத்தின் பைலட் அறைக்குள் புகுந்து விமானத்தையே தகர்க்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒருவேளை அது இந்தியாவின் விமானமாக இருந்திருந்தால் இந்தச் சீரழிவு நடந்திருக்காது என்பது மட்டும் நிச்சயம்.
56’இன்ச் ஆட்சியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும், அமெரிக்கர்களின் இந்தியாமீதான மதிப்பும் நாளுக்குநாள் நக்கிக்கொண்டே போகிறது.
